தானியங்கி விமான ரோபோட்டிக்ஸ் துறையில் முக்கியமான முன்னேற்றமாக, ஹாங்காங் பல்கலைக்கழக பொறியியலாளர்கள், பறவைகளின் அதிசயமான சூழல் வழிசெலுத்தல் திறனைப் பின்பற்றி, அதிக வேகத்தில் சிக்கலான இடங்களில் பறக்கக்கூடிய ட்ரோனை உருவாக்கியுள்ளனர்.
Safety-Assured High-Speed Aerial Robot (SUPER) எனும் இந்த ட்ரோன், மணிக்கு 45 மைல் (வினாடிக்கு 20 மீட்டர்) வேகத்தில் பறக்க முடியும். இது, 2.5 மில்லிமீட்டர் அளவு மெல்லிய தடைகள் (மின்கம்பிகள், கிளைகள் போன்றவை) உட்பட, அனைத்து தடைகளையும் கண்டறிந்து தவிர்க்கும் திறன் கொண்டது. இதற்காக, ட்ரோனில் உள்ள சென்சார்கள் மற்றும் கணினி சக்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது; GPS அல்லது முன்பே வரைபடம் தயாரிக்கப்பட்ட பாதைகள் தேவையில்லை. SUPER, அறியப்படாத சூழல்களில் முழுமையான தன்னாட்சி கொண்டு செயல்படுகிறது.
11 அங்குல அகலம் மற்றும் 1.5 கிலோ எடை கொண்ட இந்த சிறிய அமைப்பில், 70 மீட்டர் தூரத்திலும் மிகத் துல்லியமாக தடைகளை கண்டறியும் திறன் கொண்ட எடை குறைந்த 3D LiDAR சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. SUPER-இன் முக்கியமான புதுமை, அதில் உள்ள மேம்பட்ட திட்டமிடல் அமைப்பாகும். இது, பறக்கும் போது இரண்டு பாதைகளை உருவாக்குகிறது: ஒன்று அதிக வேகத்திற்காக அறியப்படாத இடங்களை தேர்வு செய்யும் பாதை; மற்றொன்று, பாதுகாப்பிற்காக தெரிந்த தடையற்ற இடங்களில் மட்டும் செல்லும் பாதை.
"ஒரு 'ரோபோட் பறவை' காட்டில் விரைவாக பறந்து, கிளைகள் மற்றும் தடைகளை சுலபமாகத் தவிர்க்கும் காட்சியை நினைவில் கொள்ளுங்கள். பறவைக்கு உள்ள விரைவான எதிர்வினைகளை ட்ரோனுக்கு வழங்குவது போல, அது தன் இலக்கை நோக்கி பறக்கும் போதும் தடைகளை நேரில் தவிர்க்கும் திறன் பெறுகிறது," என்கிறார் இந்த ஆராய்ச்சித் திட்டத்தை வழிநடத்திய பேராசிரியர் ஃபூ ஜாங்.
நிஜ வாழ்க்கை சோதனைகளில், SUPER, பல்வேறு சவாலான சூழல்களில் 99.63% என்ற சிறப்பான வெற்றிவிகிதத்தை பெற்றுள்ளது. இதில், அதிக வேகத்தில் பறத்தல், மின்கம்பிகளைத் தவிர்த்தல், அடர்ந்த காட்டில் வழிசெலுத்தல், இரவில் பறத்தல் போன்றவை உள்ளடங்கும். மேலும், SUPER, பொருள் கண்காணிப்பு திறனிலும் சிறப்பாக செயல்பட்டது; வணிக ட்ரோன்கள் தோல்வியுற்ற இடங்களில், காட்டில் ஓடும் ஓட்டப்பந்தய வீரரை வெற்றிகரமாக பின்தொடர்ந்தது.
இந்த தொழில்நுட்பம், குறிப்பாக தேடல் மற்றும் மீட்பு பணிகளில், மிகப் பயனுள்ளதாக இருக்கும். SUPER தொழில்நுட்பம் கொண்ட சிறிய விமானங்கள், இடிந்து விழுந்த கட்டிடங்கள் அல்லது அடர்ந்த காட்டுப் பகுதிகள் போன்ற பேரிடர் பகுதிகளில், பகல்-இரவு என எந்த நேரத்திலும் விரைவாகச் சென்று உயிரிழந்தோரை தேடவும், ஆபத்துகளை மதிப்பீடு செய்யவும், தற்போதைய ட்ரோன்களை விட அதிக திறனுடன் செயல்பட முடியும். Science Robotics என்ற அறிவியல் இதழில் வெளியான இந்த ஆராய்ச்சி, அதிக வேக தானியங்கி வழிசெலுத்தலை ஆய்வக நிலைமையிலிருந்து நிஜ வாழ்க்கை பயன்பாடுகளுக்கு கொண்டு செல்லும் முக்கியமான கட்டமாகும்.